டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி இன்று (செப்டம்பர் 28) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பருவகால மழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேங்கும் மழை நீரின் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினர்.
இவர்களுக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(4), புருஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக யோகலட்சுமி பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி அனுப்பப்பட்டனர்.
அங்கு கைக்குழந்தை புருஷோத்தமன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
அப்போது அங்கு இருந்த சிறுமியின் பெற்றோர் அபிநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரைத்தொடர்ந்து தற்போது திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அதில் ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!