வீக் எண்ட் நாளில் ஏதாவது ஸ்வீட் செய்து சுவைக்கலாமே என்று நினைப்பவர்கள், சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான இந்த கடற்பாசி ஸ்வீட் செய்து இந்த நாளைக் கொண்டாடலாம்.
வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல விருப்பத்துக்கேற்ப இனிப்புச் சுவையைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம் என்பதால், அனைவருக்கும் ஏற்றதாக இந்த ஸ்வீட் இருக்கும்.
என்ன தேவை
கடற்பாசி (சைனா கிராஸ்) – ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர் – 500 மில்லி
வெள்ளை சர்க்கரை – 250 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படி செய்வது
தண்ணீருடன் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்துக் கலக்கவும். பின்னர், இதில் கடற்பாசியைச் சேர்த்து, மிதமான தீயில் கடற்பாசி நன்கு கரையும் வரை கொதிக்க விடவும் .
கடற்பாசி தண்ணீரில் நன்கு கரைந்த பிறகு அதில் வெள்ளை சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும், தேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு துளி பன்னீர் சேர்க்கலாம்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கலவையைக் கீழே இறக்கவும். அகலமான பாத்திரத்தில் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டப்பட்ட கலவை நன்றாக உறைந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…