தனது நண்பர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையிலுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கடந்த ஜூலை 17ஆம் தேதி பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் மூன்று இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். அதற்கு மறுநாள் மீண்டும் பங்கிற்கு வந்த இளைஞர்கள் உரிமையாளர் ராஜன், மற்றும் ஊழியர் சுபாஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.
இது தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரின் நண்பரான அரிகேசவநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்ற குமார் தனது சக நண்பர்களுடன் நேற்று வந்து பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த வேணிராஜ் (28) என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அரிவாளால் வெட்டுபட்ட வேணிராஜ் தப்பியோட முயன்றபோதும் அவரை துரத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வேணிராஜ் தற்போது முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் நடத்திய விசாரணையில், “கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பங்க் உரிமையாளரை வெட்டிய மூவரை வேணிராஜ் தான் விரட்டிச் சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு குமார் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து வேணிராஜை அரிவாளால் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான குற்றவாளிகள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சரவணன்