வெவ்வேறு காரணங்களைக் கூறி மாவட்ட வாரியாக ஆவின் பால் விலை உயர்வு சுற்றறிக்கை மூலமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பால் முகவர் தொழிலாளர் நல சங்க நிறுவனத் தலைவரும் மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்க பேரவை செயலாளருமான சு.ஆ. பொன்னுசாமி இன்று (பிப்ரவரி 2) சில முக்கியத் தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில், “பிப்ரவரி-1 ஆவின் உருவான தினத்தன்று நிர்வாக காரணங்களுக்காக என்கிற புதுவிதமான காரணத்தைக் கூறி, கொழுப்பு சத்து அளவை குறைத்து அறிவிக்கப்படாத மறைமுக பால் விலையேற்றத்தை மக்கள் தலையில் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் சுமத்தியது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆவின் நிர்வாகமோ ஒருபடி மேலே போய், ‘ஒன்றியத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு’ என்கிற காரணத்தைக் கூறி பொதுமக்களுக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் பால் முகவர்கள் கொள்முதல் செய்கின்ற சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விலையை லிட்டருக்கு 0.40காசுகள் இன்று (02.02.2023) முதல் உயர்த்தியுள்ளது.
இதுவும் பொதுமக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 2.00ரூபாய் வரை விற்பனை விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் “நிறை கொழுப்பு பால் வணிக ரீதியான பால்” என்கிற பொய்யான காரணத்தை கூறி அந்த வகை பாலுக்கான விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில்,
சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விற்பனை விலை உயர்த்தப்படாது என அரசும், பால்வளத்துறை அமைச்சர் நாசரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக, விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்த தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே ஆவின் பால் விற்பனை மூலம் பால் முகவர்களுக்கு போதிய வருவாய் இல்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வரும் சூழலில் தற்போது நெல்லை மாவட்டத்தில் பால் முகவர்கள் திணிக்கப்பட்டுள்ள விலை உயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அந்த விலை உயர்வு சில்லரை வணிகர்களிடம் திணிக்கப்படும் சூழலுக்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த விலை உயர்வானது இறுதியில் நுகர்வோர் தலையிலேயே சுமத்தப்படும் அதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் பொன்னுசாமி.
மேலும் அவர், “தமிழ்நாடு அரசு ஆவின் பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தினால் கடுமையான எதிர்ப்புகள் வரும் என்பதாலேயே ஒவ்வொரு ஒன்றியங்களாக உயர்த்திட அரசு அனுமதி அளித்துள்ளதா..? என தெரியவில்லை.
அதுமட்டுமின்றி கோவை, நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களைத் தொடர்ந்து இதர ஒன்றியங்களிலும் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தி, அதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, பால் விற்பனையின் அளவை குறைத்து, ஆவினை அழிவை நோக்கி கொண்டு செல்ல ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ..? என்கிற சந்தேகமே தற்போது மேலோங்கி நிற்கிறது.
கோவை, நெல்லை உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒன்றியங்களும் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது எனவும், தற்போது மாற்றப்பட்டுள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும் என ஒன்றிய பொதுமேலாளர்களுக்கும், ஆவின் நிர்வாக இயக்குனருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முகவர்களுக்கு பால் விற்பனை விலையை உயர்த்தினால் முகவர்கள் மூலம் வாங்கும் மக்களுக்கும் அந்த விலை உயர்வு பொருந்தும்தானே…
–வேந்தன்
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
ஆழம் பார்த்த எடப்பாடி- அமைதி காக்கும் அண்ணாமலை- படபடக்கும் பன்னீர்: கூட்டணி கடமுடா!
பால் விலையை உயர்த்துவது எதிர்வரும் தேர்தல்களில் ஆளும்கட்சிக்கு தண்டனையாக மாறும்.அதுபோகட்டும் டீஸல் பெட்ரோல் எல் பி ஜி சிலிண்டர் விலையை கொடூரமாக எந்த விதமான காரனமும் இன்றி விலையை உயர்த்தியதற்கு வரும் தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையைவிட பிஜேபி கட்சி அதல பாதாளத்திற்கு செல்லப்போவது காலத்தின் கட்டாயம் ஏனென்றால் ஏழை எளிய மக்களின் கண்ணீர் பெட்ரோலைவிட பவரானது.
நிர்வாக திறமையின்மையால் விலை ஏற்றம். உற்பத்தி குறையாமல் இருக்கிறதே. வீணாகும் பாலினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக ரீதியாக அனுபவம் இங்கு வேண்டும்..