தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இறுதித் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும், 6 முதல் ப்ளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், இன்று(ஜுன் 1) சென்னையில் பல இடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர் “தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
மேலும், “பள்ளிகள் திறக்கும் தேதியை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம். ஆனால் அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள். சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அதுவும் 10 ஆம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம்.
இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை!
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்: முதல்வர் கண்டனம்!