திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அரசுப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பயின்று வருகின்றனர் என்று மாணவர்களின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதே பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் சாலையோரத்தில் உள்ளது. எனவே மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், பள்ளி வளாகத்தில் எவரும் அத்துமீறி நுழையாமல் இருப்பதற்கும் ஏதுவாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
சாலையோரத்தில் கட்டப்பட்ட இந்த சுவர் கடந்த கஜா புயலின் போது மரங்கள் சாய்ந்ததால் இடிந்து விட்டது. இடிந்து விழுந்த சுவர் மீண்டும் கட்டப்படவில்லை. அங்கன்வாடியில் படிக்கும் சிறு குழந்தைகள் சுவரின் இடிந்த பகுதி வழியாக சாலை பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் நுழையவும் வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி வளாகச் சுற்றுச்சுவரை சீரமைப்பு செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவர் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களின் பெற்றோர் மத்தியிலும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜ்