சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ‘சார்’கள் காப்பாற்றப்படுகிறார்களா?

Published On:

| By Kavi

சென்னையில் சிறுமிகளை காதலிப்பதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு பிறகு தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிறுமி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது தாயார் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஆகியோரும் மாயமானது தெரியவந்தது.

சிறுமிகள் மூன்று பேரையும் காதலிப்பதாக கூறி, அவர்களது காதலர்களான மாணவர்கள் 3 பேர் 24ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அரசு நூலகம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் அலி (21), அபிஷேக் (19), மற்றும் ஒரு சிறுவன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, சிறுவர்களின் நண்பர்களான யுகேஷ், கலிமுல்லா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 6 பேர் கைதாகியிருக்கும் நிலையில் 3 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், 3 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் யுகேஷ், கலிமுல்லா மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வழக்கு திரு.வி.க நகர் காவல் நிலையத்திலிருந்து செம்பியம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரமே பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திரு.வி.க நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பல “SIR”கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.

“SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது.

இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக “சார்”களை மறந்து விட்டீரா பழனிசாமி?

இதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்தும் வருகிறது திராவிட மாடல் ஆட்சி.

விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார்.

“சார்”களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் “சார்”களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் “சார் யார்” என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் “சார் யார்” என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ’’சார் யார்’’ என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ’’சார் யார்’’ என்பது மறந்து போனதா?

நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் “அதிமுக சார்களை” மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி “சார்”களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share