கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 28) கடைசி பள்ளி வேலை நாள்.
நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பெற்றோர்களுக்கு இது விடுமுறைக் காலம் அல்ல. இதுதான் தேர்வு காலம்.
மாணவர்கள் நூலகங்களுக்கு செல்வது, ஆங்கிலம் பேச கற்றுக் கொள்வது ஆகியவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
அடுத்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி 12 ஆம் வகுப்புத் தேர்வும், மார்ச் 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்புத் தேர்வும் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்.
இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் எதாவது செய்ய வேண்டுமென்றால் முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். துணைத் தேர்விற்காக மே 9 ஆம் தேதி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
பொன்னியின் செல்வன் – 2: ட்விட்டர் விமர்சனம் இதோ!