கோவையில் உள்ள தனியார் பள்ளியில் சேர மாணவர் ஒருவர் ரூ.40,000 கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், அவர் பள்ளியில் சேராததால் கட்டணத்தை 12 சதவிகித வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு பொதுப் பயன்பாட்டு சேவைகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் அன்றாடம் நாம் பயன்படுத்துகிறோம். இந்த சேவைகளில் பல்வேறு குறைகள், பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்போம். இது போன்ற பிரச்சினைகளில் மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய ஏற்பாடாக ‘நிரந்தர மக்கள் நீதிமன்றம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஏதேனும் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் மட்டுமே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக முடியும்.
இந்த நிலையில் கோவை போத்தனூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில், மகாலிங்க புரத்தைச் சேர்ந்த சுதா மகேஷ் என்பவர் தனது மகனை 11-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக கல்விக் கட்டணமாக ரூ.40,000 செலுத்தி உள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனதால், முன்பணமாக செலுத்திய 40,000 ரூபாயை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் சுதா மகேஷ் திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க மறுத்ததால், கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் சுதா மகேஷ் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், 40,000 ரூபாயை சுதா மகேஷுக்கு 12 சதவிகித வட்டியுடன் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சாப்பிடும் உணவு, தொண்டைக் குழியிலேயே நிற்கிறதா… தீர்வு என்ன?