பள்ளி மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் மகா விஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா இன்று (செப்டம்பர் 7) தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் நடத்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிபாரிசில்தான் இந்த நிகழ்ச்சி நடந்திருப்பதாக அரசு மேல்நிலை, உயர்நிலை ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் நேற்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பள்ளி மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் தான் மகா விஷ்ணுவின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தது.
ஆனால், நாங்கள் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், அந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை.
பள்ளி மேலாண்மை கூட்டத்தை கூட நாங்கள் இன்னும் கூட்டவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கப்போவதாக எங்களுக்கு முன்கூட்டியே தகவல் வந்திருந்தால் நிச்சயமாக அதனை தடுத்திருப்போம்.
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை பரப்பும் வகுப்புகளுக்கு நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். மகா விஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த யார் அழைத்து வந்தார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம்.
பள்ளி கல்வித்துறை தரப்பில் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிகழ்விற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கமளித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!
சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி