மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் நேற்று (டிசம்பர் 9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் தான் புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று மதியம் வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தொடர்ந்து பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மோனிஷா