முதல்முறையாக மதுபான கடைக்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
21 டாஸ்மாக் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இன்று (ஆகஸ்ட் 18) ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மாக் பொது மேலாளர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் சங்கங்களின் 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடைகளுக்கு தனி மின் மீட்டர் பொருத்தப்படும். டாஸ்மாக் கடைகளுக்கான வாடகையையும் நிர்வாகமே செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாயிரம் டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்.
டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தி தரப்படும். டாஸ்மாக் மதுபானங்களை டெட்டரா பாக்கெட்டில் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நான்கு மாநிலங்களில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபான உற்பத்தி முதல் விற்பனை வரை மூன்று மாதத்தில் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்.
முதல்முறையாக மதுபான கடைக்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக செயல்படும் டாஸ்மாக் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மோடி வடை… மேக்கின் இந்தியா ஊசி: அப்டேட் குமாரு
சென்னையில் ரூ.45 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது!