நாங்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் இன்று (ஆகஸ்ட் 13) விசாரணையை துவங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் வெட்டப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத்தின் ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் உறுப்பினர் ரகுபதி நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்று காலை விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”இன்று காலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை இருவரையும் பார்த்தோம்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஆராய்ந்தோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவரின் ஊரான நாங்குநேரியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவர் படித்த வள்ளியூர் பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டோம்.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடமும் நேரில் விசாரணை நடத்தியுள்ளோம்.
இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க முதல்வர் உத்தரவின் பேரில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று காலையில் தான் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இடையேயான இந்த பிரச்சனை குறித்து ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. விசாரணை முடிந்ததும், ஆணையத்தில் விவாதித்து அரசிடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்போம்.” என்று ரகுபதி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி
ஸ்ரீதேவி – குறும்புகளின் ஓர் முகம்!