sc child pornography

“சிறார் ஆபாசப்படம் பார்ப்பது குற்றம்”: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

தமிழகம்

சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பதும், சேமிப்பதும் குற்றம் என்று உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 23) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் மீது, சிறுவர்களின் ஆபாச காணொலியை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ததற்காக, அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒருவர் தனிப்பட்ட முறையில் சிறார் ஆபாச காணொலிகளைப் பார்த்தார் என்பதற்காக அவர் மீது போக்சோ சட்டம் பிரிவு 14(1) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67B அடிப்படையில் வழக்கு பதிய முடியாது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இருந்தால், அவர் மீது போக்சோ சட்டம் பிரிவு 14(1) கீழ் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.

அதே மாதிரி குழந்தைகள் உள்ள ஆபாச காணொலிகளை ஒரு நபர் மற்றொருவருக்கு பகிர்ந்திருந்தால், அவர் மீது தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67B கீழ் வழக்கு பதிவு செய்யலாம். ஆனால், இந்த வழக்கில் அப்படி ஏதும் நடக்கவில்லை” என்று வழக்கை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் (Just Rights for Children) என்ற அரசு சார்பற்ற அமைப்பு  (Non Governmental Organization) கூட்டணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பர்திவாலா கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் இறுதியில், சிறார் ஆபாசப்படத்தை பார்ப்பதும், சேமிப்பதும் குற்றம். அப்படிச் செய்பவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவு 15-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.

மேலும் ‘குழந்தை ஆபாசப்படங்கள்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக “Child Sexually Exploitative Abuse Material” என்ற சொல்லாடலை பயன்படுத்த வேண்டும். இதற்காக போக்சோ சட்டத்தை நாடாளுமன்றம் திருத்த வேண்டும் என்று நீதிபதி பர்திவாலா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பில் – வெப்சீரிஸ் விமர்சனம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை… ரவுடி புதூர் அப்புவிடம் போலீசார் தீவிர விசாரணை!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசநாயக்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *