தமிழ்நாடு வெள்ள நிவாரண விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்!

Published On:

| By Monisha

TN flood relief fund

தமிழ்நாட்டிற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 12) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிவாரண நிதியை வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.8,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அதில் முதற்கட்டமாக ரூ.3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. தமிழ்நாடு அரசே இதனை பார்த்துக் கொள்ளும். இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது என்பதால், பிரச்சனை இருந்தால் தமிழ்நாடு அரசே முறையிடுவார்கள் என்று மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கும் தனுஷ்?

சூர்யாவின் ’புறநானூறு’ படத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share