செந்தில் பாலாஜி வழக்கில் இருதரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 2வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்ஹி ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில், ”அமலாக்கத்துறையால் சட்டவிதிகளின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய அவர்களுக்கு அதிகாரமில்லை. ஒருவேளை சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் அது நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும்.
போலீஸ் காவல் கோருவதற்கான எந்த அதிகாரமும் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. அவர் வெளிநாட்டுக்கு செல்வார் என்ற அச்சமோ, பயமோ கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விசாரணை என்ற பெயரில் வரவழைத்து, அதன்பின்னர் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை இது போன்ற செயலில் ஈடுபடுகிறது என்று வாதிட்டார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது விரிவான வாதங்களை முன்வைப்பதற்கு நாளை ஒருமணி நேரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்ட நிலையில், இடையீட்டு மனுதாரர்களுக்கும் நாளை தங்களது வாதத்தை முன்வைக்க அனுமதி அளித்தனர்.
மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் நாளைக்குள் இருதரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை… செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!
’காக்க.. காக்க’ சூர்யாவுக்கு தந்த நட்சத்திர அங்கீகாரம்!