மதுரை சிறையில் இருந்து சென்னைக்கு மாத்துங்க… உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோரிக்கை!

தமிழகம்

மதுரை சிறையில் இருந்து தன்னை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும் இரண்டாவது முறையாக தன் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் ஆஜராகி, “மனுதாரர் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு கடந்த ஒரு மாதமாக தனிமை சிறையில் உள்ளார்.

அவரை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும். அங்குள்ள நூலகத்தில், ஏராளமான புத்தகங்கள் இருப்பதால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். தயவுசெய்து இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி பரிதிவாலா, “தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வமான தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மையை நாங்கள் பார்க்க வேண்டும். செப்டம்பர் 9 வரை காத்திருங்கள். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கடைசி மலையாள படத்தில் மோசமான அனுபவம் ஓடி வந்துட்டேன்! – நடிகை கஸ்தூரி

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும் : உச்சநீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0