கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை இருப்பதாகவும், அதனால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் சவுக்கு சங்கர் இன்று (மே 17) முறையீடு செய்தார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், திருச்சியில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக கடந்த மார்ச் 15-ஆம் தேதி பெண் போலீசார், சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து அழைத்து சென்று திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது பெண் காவலர்கள் தனது கையை முறுக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் புகாரளித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டு, ஒரு நாள் போலீஸ் கஸ்டடி வழங்கினார். அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், சவுக்கு சங்கர் இன்று மீண்டும் திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பாக ஆஜர்படுத்தார்.
அப்போது, அவரிடம் நீதிபதி, “விசாரணை முறையாக நடத்தப்பட்டதா? உணவு தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சவுக்கு சங்கர், “காவல்துறையினர் விசாரணையின் போது என்னை துன்புறுத்தவில்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டது.
கோவை சிறையில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாத கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சிறையில் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதனால், வழக்கமான கைதிகள் அடைக்கப்படும் பொதுவான சிறைக்கு என்னை மாற்ற வேண்டும்.
கோவை சிறையில் எனக்கு உளவியல் ரீதியான பிரச்சனை உள்ளது. சென்னை அல்லது திருச்சி சிறைக்கு என்னை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். பின்னர் மே 28-ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை கோவை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பெண் போலீசார் சவுக்கு சங்கரை திருச்சியிலிருந்து கோவைக்கு அழைத்து சென்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூதாட்டம், கடத்தல்… விஜய் சேதுபதி 51 படம் டைட்டில் இதோ!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம்: ஜியோவின் அதிரடி ஆஃபர்… விவரம் இதோ!