சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Selvam

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) தீர்ப்பளித்துள்ளது.

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, “சவுக்கு சங்கர் பேச்சால் பொது அமைதி பாதிக்கப்படவில்லை. கிளாம்பாக்கம் போராட்டத்திற்கு ஒருநாள் பிறகு தான் சவுக்கு சங்கர் பேசிய யூடியூப் வீடியோ வெளியானது. சவுக்கு சங்கர் மீது தாம்பரம் கமிஷனர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் சென்னை கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தடுப்பு காவலுக்கு எதிராக தாயார் கமலா அனுப்பிய மனுக்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படவில்லை. ஏதேச்சதிகாரம், துஷ்பிரயோகத்தை காட்டும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், “சவுக்கு சங்கர் கூறியது போன்ற வார்த்தைகள் காவல்துறையினரின் மன உறுதியை பாதிக்கிறது. ஒரு நேர்காணலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக போலி கடிதத்தை காட்டியிருந்தார்

எதிர்காலத்தில் அவர் இதுபோன்று செயல்படுவதை தடுக்க வேண்டும்.  இது போன்ற செயல்களை செய்தால் மீண்டும் காவலில் வைக்கப்படலாம் என்று அச்சம் அவருக்குள் வரவேண்டும் என்பதற்காகவே குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்ற வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், “ஊடகவியலாளர்கள் அல்லது யூடியூபர்களின் குரல்கள் நெரிக்கப்பட்டால் நாம் மீண்டும் காலனித்துவ காலத்திற்கு செல்ல நேரிடும்.

தடுப்பு காவல் என்பது காலனித்துவச் சட்டமாகும். பல அமைப்புகள் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுத்து சிலருக்கு எதிராக செயல்படுகிறீர்களா?

நீங்கள் வழக்கமான குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரலாம். ஆனால் பேச்சு சுதந்திரத்தை நெரிக்கவோ நசுக்கவோ முடியாது” என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேற்கொண்டு வேறு எந்த வழக்குகளிலும் அவரை விசாரிக்க தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுதந்திர தின செலிப்ரேஷன்… டிபியை மாற்றிய மோடி

மில்லியன் இதயங்களை வென்றுள்ளார்… வினேஷ் போகத்துக்கு சப்போர்ட் செய்த யுவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel