சவுக்கு சங்கர் வழக்கு : அதிரடியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!

Published On:

| By indhu

Savukku Shankar case - the judge asked the question in action

”சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்ட விரோதம் என்று முடிவானால், அவருக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கு அரசு ரூ.10,000 இழப்பீடு வழங்குமா?” என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (ஜூன் 6) கேள்வி எழுப்பி உள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மாதம் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் உள்ளதை எதிர்த்து அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஆனால், மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறபிக்க முடியாது எனத் தெரிவித்து, சவுக்கு சங்கர் தாய் மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி நீதிபதி பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜூன் 6) உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நடைபெற்றது.

இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன் ஆஜரானார். அவர், கடந்த 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமர்விற்கு வழக்கை மீண்டும் அனுப்ப வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது.

தனி நபர்களின் சுதந்திரம் முக்கியமானது. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என முடிவானால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த பின், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்குமா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், “இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்விற்கு அனுப்புவது அவசியமில்லை. அது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கும் செயல்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் வழக்கு தொடர்பான பதில் மனுவை காவல்துறை பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”திட்டமிட்ட சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்” : பிரேமலதா குற்றச்சாட்டு!

”அதிமுக தொண்டர்களை அழைக்க ஓபிஎஸ்-க்கு உரிமை இல்லை”: கே.பி.முனுசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.