சிஎம்டிஏ புகாரில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தமிழகம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யு ட்யூபர் சவுக்கு சங்கர், நேற்று (மே 10) இரவு  மேலும் சில வழக்குகளுக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குப்பதிவு செய்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சிஎம்டிஏ நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக  கோவை மத்திய சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அப்போது, மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விளக்குமாறு, செருப்பு ஆகியவற்றுடன் வந்த அவர்கள், பெண்களை இழிவாக பேசும் இவரை குண்டாஸில் போட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

எழும்பூரில் உள்ள சென்னை தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பதிவு செய்த புகாரின் அடிப்படையில்,   “சங்கர்  தவறான ஆவணங்களின் தரவு மற்றும் தகவல்களை நேர்காணல்களில் பயன்படுத்தினார், இது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது” என்று போலீசார் தெரிவித்தனர்.

CMDA வின் புகாரின் அடிப்படையில், பிரிவுகள் 465 , 466, 471, 474 r/w 420 ( IPC)   ஆகிய பிரிவுகளின்படி சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் போலீஸார்.

மேலும்,  2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் வழக்கு 294(b), 354D, 506 (i), IPC இன் 509 மற்றும் பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது. தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த வீரலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மற்றும் ரெட்பிக்ஸின் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் அவரை கைது செய்ய போலீஸார்  நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

சவுக்கு சங்கர் தரப்பில், ‘இனி இதுபோல தவறான தகவல்களை யு ட்யூபில் பேச மாட்டேன்’ என்று அண்டர் டேக்கிங் அபிடவிட்  தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் சிஎம்டிஏ கொடுத்த புகாரின் அடிப்படையிலான வழக்கில் சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து நேற்று இரவு அவரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல போலீஸார் புறப்பட்டனர்.

இது ஒருபக்கம் என்றால்… ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்த  தேனி மாவட்ட போலீசார், நேற்று   (மே 10) பகலில் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திலும்,  சென்னை தி.நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த  சோதனை முடிவில் சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரது அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது!

பஞ்சாயத்துக்கு வராத கமல்… லிங்குசாமி ஏமாற்றம்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *