அதிமுகவில் அதிகார பலத்தோடு இருந்த சசிகலாவின் உறவினரான ராவணன், இன்று (செப்டம்பர் 21) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய புள்ளிகளை வளர்த்தெடுத்தவர் சசிகலாவின் உறவினரான ராவணன். சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் இந்த ராவணன். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உட்பட கொங்கு மண்டல அதிமுக புள்ளிகளை வளர்த்தெடுத்தது ராவணன்தான் என்று இன்றும் கொங்கு அதிமுகவினர் பேசிக் கொள்கிறார்கள்.
2003-04ஆம் ஆண்டுகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான நேர்காணல் எல்லாம் ராவணன் தலைமையிலேயே நடைபெற்றது. கொங்கு மண்டல அதிமுகவை மட்டுமல்லாமல் கொடநாடு எஸ்டேட்டையும், மிடாஸ் மதுபான தொழிற்சாலையையும் இவரே நிர்வகித்து வந்தார்.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்த ராவணன் ஜெயலலிதாவின் வெறுப்பையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்தார். அதனால், கட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்டார். பின்னர், மீண்டும் அதிமுகவில் நுழைந்தார்.
இந்த நிலையில், தன்னுடைய மகனான அரவிந்துடன், திருச்சியில் தங்கி இருந்த ராவணனுக்கு, இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர் சொந்த கிராமத்தில் நாளை (செப்டம்பர் 22) நடைபெற உள்ளது.
–ஜெ.பிரகாஷ்
ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு: ஆ.ராசா என்ன சொல்கிறார்?