சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மூலம் வெளிவந்திருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் பலகட்ட விசாரணைக்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை இன்று(அக்டோபர் 18) சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
அப்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. அதில் 2012 ஆண்டுக்குப் பிறகு சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் சுமூக உறவு இல்லை என்று சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ணப்பிரியா வாக்குமூலம் அளித்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறது.
மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பிறகான நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்தும் ஜெயலலிதாவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஸ்டூவர்ட் ரசல் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால் அதை சுயலாபத்திற்காக செய்யவிடாமல் சசிகலா தடுத்துள்ளதாகவும் ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது.
ஒருவேளை ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருக்கலாம் என்றும், சசிகலாவை குற்றம் சாட்டுவதைவிட வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
கலை.ரா
ஜெ. மரண தேதி: ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி தகவல்!
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்!