சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாருடன் கான்ஃபரன்ஸ் காலில் பேசிய மாவட்ட நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டதைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 18) உறுதி செய்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றம்சாட்ட நிலையில், அவர் உட்பட 24 பேரை விடுதலை செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போது ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி மற்றும் சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கௌரி காமாட்சி ஆகியோருடன் கான்ஃபரன்ஸ் காலில் பேசியதாகப் புகார் எழுந்தது.
இந்த உரையாடலின் பதிவோடு வழக்கறிஞர் துரைசாமி நீதிமன்ற பதிவாளரிடம் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை, காவல்துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையின் அடிப்படையில் மாவட்ட நீதிபதியாக இருந்த ராஜசேகரனுக்கு எதிராகத் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதி ராஜசேகரனைப் பணி நீக்கம் செய்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகரன் மனு தக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீதித்துறை அதிகாரிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை ராஜசேகரனின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
உயர் நீதிமன்றத்தின் உயர்மட்ட நிர்வாக குழு உட்பட அனைத்து நிலைகளிலும் மனுதாரரின் வழக்கு பரிசீலிக்கப்பட்டது. இதில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த குறைபாடுகளையும் கண்டறியவில்லை” என்று கூறி ராஜசேகரனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விபத்தில் சிக்கிய ‘சைத்தான்’ நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
‘கோட்’ படத்தின் ஷீட்டிங்கில் விஜய்…திக்குமுக்காடிய திருவனந்தபுரம்