பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ வைணவ ஸ்தலங்களில் ஆயிரம் ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலும் ஒன்று. சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும் சங்கர லிங்க மூர்த்தியாகவும் காட்சி தரும் அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று ஆடித்தபசு திருவிழாவிற்காக கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29ம் தேதியும் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வரும் 31ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் நடைபெறும். சிகர நிகழ்வில் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வானத்தில் தபசு காட்சி கொடுக்கிறார்.
விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். இவ்விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துவருகின்றனர்.
வந்தே பாரத் ரயில்: சிறுநீர் கழிக்க ஏறியவருக்கு ரூ. 6000 இழப்பு!
மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!