சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் சங்கர் இன்று (செப்டம்பர் 6) ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பரம்பொருள் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்ற நபர், சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சில தினங்களுக்கு முன்பு ஆன்மீகம் பற்றிச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
சைதாப்பேட்டை பள்ளியில் அவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கும் போது, அவரை இடைமறித்து, அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சங்கர் , இப்படி பள்ளி மாணவர் மத்தியில், முற்பிறவி, பாவம் புண்ணியம் என்று பேசுவது சரியா என்று கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. எப்படி அரசு பள்ளிகளில் இது போன்ற சொற்பொழிவுகள் ஆற்றப்படுகிறது? யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, இன்று அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்வில், மகாவிஷ்ணுவைக் கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டிப் பேசினார். இதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சைதாப்பேட்டை பள்ளி ஆசிரியர் சங்கர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் “ மகாவிஷ்ணு தனது உரையில், உடல் ஊனமுற்றவர்கள் முன் ஜென்மத்தில் பாவம் செய்திருப்பார்கள். நான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால், அது என்னை காயப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி சமூகத்தினரையே அவரது பேச்சு இழிவுபடுத்துவது போல இருந்தது. அதுமட்டுமல்லாமல் நான் கேள்வி கேட்டதற்கு மகாவிஷ்ணு என் மதம் மற்றும் சாதியை தெரிந்துக்கொள்வதற்காக என் பெயரைக் கேட்டார். ஆனால் நான் கடைசி வரை என் பெயரைச் சொல்லவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சக ஆசிரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு “நான் மகாவிஷ்ணுவைக் கேள்வி கேட்டதற்கு என்னை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார். சக ஆசிரியர்களும் நான் தைரியமாகப் பேசியதற்குப் பாராட்டினார்கள். எங்களுக்கு இல்லாத தைரியம் உங்களுக்கு இருக்கிறது என்றார்கள்” என்று சங்கர் பதிலளித்தார்.
இதற்கிடையில் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசியை இடமாற்றம் செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகளிர் பள்ளிக்கு மகாவிஷ்ணுவை அழைத்து வந்தது எப்படி?
திருக்குறளை பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்க போகிறார்களா? : உமா ஆனந்த் கேள்வி!
அன்று நடிகர் தாமு… இன்று மகா விஷ்ணு… மாணவர்களை அழ வைக்கும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்!