கோவையில் 2 ஆவது நாளாக ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
கோவை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய நிலையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆனால் தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் தூய்மை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி தினமான நேற்று(அக்டோபர் 2) முதல் கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.
இரண்டாவது நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு வரக்கூடிய தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரும் 10-ம் தேதி வரை கோவை மாநகரில் கூட்டம் கூடவோ, போராட்டம் நடத்தவோ அனுமதி இல்லை எனவும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

கலைந்து செல்லாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் அங்கிருந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸ் கைது செய்தது.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஒருபக்கம் போலீஸ் கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக திடீரென்று போராட்டத்தில் குதித்துள்ளதால் கோவையில் பல இடங்களில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை தடுத்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறை மூலம் சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
கலை.ரா
கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?
ஐசியுவில் முலாயம்சிங் : நலம் விசாரித்த மோடி