காவல் நிலையம் முன்பு குப்பையைக் கொட்டிய தூய்மைப் பணியாளர்: காரணம் என்ன?

தமிழகம்

ஆத்திரத்தில் காவல் நிலையம் முன்பு குப்பையைக் கொட்டிய தூய்மைப் பணியாளரின் செயல்  நாமக்கல்லில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டி வருபவர்கள் என பலருக்கும் அதிகமான அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல்லில் போக்குவரத்து போலீஸார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்படி, நாமக்கல் நகர காவல் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் கந்தசாமி என்பவரை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்திருக்கின்றனர்.

ஆனால், போலீஸார் விதித்த அபராதத் தொகையை அவர் செலுத்தவில்லை. மாறாக அந்தப் பணியாளர், ‘நான் நகராட்சி பணியாளர். என் மீது எவ்வாறு வழக்கு பதிவு செய்வீர்கள்? நான் அபராதத் தொகையை கட்ட முடியாது’ என்று காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், போலீஸார், ‘யாராக இருந்தாலும் விதிகளை மீறினால், அபராதம் கட்டியே ஆக வேண்டும்’ என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கின்றனர்.

இதனால், வேறு வழியின்றி, அவரும் அபராதத் தொகையை கட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அப்போது அபராதத் தொகையை அவர் கட்டிவிட்டுச் சென்றாலும், அரசு ஊழியரான தனக்கே அபராதம் விதித்துவிட்டார்களே என்ற கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

sanitation worker dumped garbage in front of the police station

இதனால் ஆத்திரமடைந்த அவர், பிற்பகலில் போலீஸார் இல்லாத நேரத்தில், நாமக்கல் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், நாமக்கல் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அள்ளி அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா,

சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமி போக்குவரத்து காவல் நிலையம் முன்பு குப்பைகளைக் கொட்டிச் சென்றதாக புகார் வந்திருக்கிறது.

அது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு ‘மெமோ’ வழங்கப்பட்டிருக்கிறது. அவர் காவல் நிலையம் முன்பு குப்பை கொட்டியது உறுதி செய்யப்பட்டால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

-ராஜ்

பெண் மருத்துவர் தற்கொலை: பதற வைக்கும் கடிதம்!

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு!

9 மணி நேர ரயில் தாமதத்தை கொண்டாடிய பயணிகள்: வைரல் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *