கோவை மாவட்டங்களில் வீடுகளிலும், தோட்டங்களிலும் 15-25 ஆண்டுகள் பழமையான சந்தன மரங்கள் வளர்ந்து காய்ந்திருக்கின்றன.
இதுபோன்ற சந்தன மரங்களை இரவு நேரங்களில் முகமூடி அணிந்து கொண்டு வரும் கும்பல் துண்டு துண்டாக வெட்டி மூட்டைக் கட்டிக்கொண்டு தப்பிவிடுகிறது.
கடந்த சில வருடங்களாகவே கோவையில் இருக்கும் சந்தன மரங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கோவையில் பாதுகாப்பு நிறைந்த மாவட்ட ஆட்சியர் பங்களா என பல இடங்களிலும் சந்தன மரங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன.
சந்தன மரங்களை கடத்தும் கும்பல் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கிறது என கோவை போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
காவல் துறையும், வனத்துறையும் விழிப்போடு இருந்தாலும், ஆங்காங்கே சந்தன மரங்கள் களவு போய்க்கொண்டுதான் இருக்கிறது.
இதனால் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், சந்தன மர கடத்தலை தடுக்க வேண்டும், கடத்தல் கும்பலை பிடிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.
இந்நிலையில் ஜூலை 31ஆம் தேதி இரவு சந்தன மர கட்டைகளை கடத்திச் சென்ற லாரியை சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்தனர் கோவை போலீசார்.
இதுகுறித்து போலீஸ் காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“சில மாதங்களுக்கு முன்பு போத்தனூர் உதவி ஆணையராக பொறுப்பேற்ற கரிகால் பாரி சங்கர், தனது உட்கோட்டத்தில் எங்கெங்கு சந்தன மரங்கள் இருக்கின்றன. யார் யார் வீட்டில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுகின்றன,
எந்தெந்த தோட்டத்தில் மரங்கள் இருக்கின்றன. சந்தன மர கடத்தலில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் யார் யார்? என அனைத்து விவரங்களையும் சேகரித்தார். இதனை தனது ஸ்பெஷல் டீம் மூலமாகவும் கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயம் கடத்தல் காரர்களை பிடிப்பதற்காக மீன் கொத்தி பறவையாக காத்திருந்த உதவி ஆணையருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில், தனது ஸ்பெஷல் டீம் மற்றும் காவல் நிலையங்களை அலர்ட் செய்தார்.
முக்கிய சாலைகளில் வாகன பரிசோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி ஜூலை 31ஆம் தேதி இரவு போலீஸ் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தார்பாயால் மூடப்பட்ட KA16 c 1510 என்ற பதிவெண் கொண்ட ஈச்சர் லாரி ஒன்று பாலக்காடு பகுதியிலிருந்து சேலம் நோக்கி சென்றது. அந்த லாரியை கொச்சின் டூ சேலம் பைபாஸ் சாலையில் வெள்ளலூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்க சென்றனர்.
ஆனால் போலீஸ் வருவதை கவனித்துக்கொண்ட ஓட்டுனர் லாரியை நிறுத்தாமல் வேகம்பிடித்தார். போலீசார் மீதே இடிக்க வருவது போல் லாரியை ஓட்டியதால் போலீசார் சற்று ஒதுங்கும் போது அங்கிருந்து லாரி கடந்துவிட்டது.
உடனடியாக போலீசாரில் ஒரு டீம் அந்த லாரியை பின் தொடர, உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர், துணை ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் ஒத்துழைப்புடன் சேலம் மாவட்ட போலீசாருக்கு அலர்ட் செய்தனர்.
தொடர்ந்து உதவி ஆணையரின் ஸ்பெஷல் டீமில் இடம்பெற்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ், தலைமை காவலர் ரமேஷ், போலீஸ் ஆனந்த் குமார் ஆகியோரும் காரில் லாரி பின்னால் விரட்டிச் சென்றனர்.
கோவை வெள்ளலூரில் தொடங்கி இரவு நேரத்தில் 100 கிலோ மீட்டருக்கும் மேலாக போலீசார் துரத்தி செல்கின்றனர். எனினும் அந்த லாரி சிக்கவில்லை. தொடர்ந்து சேஸ் செய்து சென்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஒரு வழியாக லாரியை மடக்கி பிடித்தனர்.
லாரியை மறித்து நிறுத்தி ஓட்டுநர் மனோஜிடம் அங்கேயே போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது ஓட்டுநர் ஸ்பெஷல் டீம் சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜிடம், “சார் இது எங்களுக்கு புதுசு இல்லை, உங்களுக்குத்தான் புதிதாக தெரிகிறது, லட்சமா? கோடியா? எவ்வளவு வேண்டும். எங்கே? கொடுக்கவேண்டும் சொல்லுங்கள். 30 நிமிடங்களில் கொடுக்க சொல்கிறேன்” என்று பேரம் பேசினான்.
சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஓட்டுநர் பேரம் பேசும் தகவலை மேலிடத்துக்கு தெரிவித்தார். இதற்கு மேல் அதிகாரி, ‘ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்யாமல் அழைத்து வாருங்கள்’ என்று சொன்னார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர், ‘வாங்க அதிகாரிகளிடம் பேசிக்கலாம்’ என்று அழைத்த போது, முரண்டு பிடித்த ஓட்டுநர் எந்த அதிகாரியிடம் பேச வேண்டும் என்று சொல்லுங்கள், உடனே பேச சொல்கிறேன் என்றான்.
இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி பிஸ்டலை எடுத்து சரி செய்வது போல் பாவனை காட்டியதும், போலீஸ் வாகனத்தில் ஏறிக்கொண்ட ஓட்டுநரை அழைத்துக்கொண்டு கோவை வந்தனர். கூடுதலாக போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து சந்தன மர கட்டைகள் உள்ள லாரியையும் எடுத்துக்கொண்டு வந்தனர்.
இதையடுத்து ஓட்டுநர் மனோஜிடம் விசாரணை செய்த போலீசார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மஜீத் மற்றும் அம்சா இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், “கோவை பகுதியில் சந்தன மரங்கள் அதிகமாக உள்ளது. அவற்றை இடம், நேரம் பார்த்து வெட்டி துண்டுத் துண்டாக்கி மூட்டைக் கட்டி கொடுப்பார்கள், ஒரு கிலோ 2500 முதல் 3000 வரையில் வாங்கி செங்கல்பட்டில் உள்ள பாபுவிடம் கிலோ 7000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வோம், அந்த பாபு யாரிடம் கொடுப்பார் என்பது எங்களுக்கு தெரியாது” என்று தெரிவித்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு மத்தியில், ஈச்சர் லாரியில் உள்ள சந்தன மர மூட்டைகளை கண்டுபிடிக்க நீண்ட நேரம் போலீசார் தேடினர்.
அதன்பிறகு ஓட்டுநர் மனோஜ் லாரியில் உள்ள ரகசிய அறையைத் திறந்து காட்டினார், அந்த அறையில் 57 மூட்டைகளில் 1050 கிலோ சந்தன மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய்” என்கின்றனர்
இந்த வழக்கு வனத்துறைக்கு சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை வனத்துறையினரிடம் கோவை போலீசார் ஒப்படைத்துவிட்டனர்.
இந்த சந்தன மரம் கடத்தலில் வனத்துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கும், காவல் துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து மாமூல் வாங்குவதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
“வனத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள், செங்கல்பட்டு பாபு மற்றும் மஜீத் மற்றும் அம்சாவிடம் சரியான முறையில் விசாரித்தால் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரையில் பலர் சிக்குவார்கள்” என்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.
– வணங்காமுடி
”பேச்சே கிடையாது… வீச்சு தான்”: ஜெயிலர் டிரெய்லர் எப்படி இருக்கு?
கோடிக்கணக்கில் கடன்… கைவிட்டு போன கம்பெனி: பிரபல கலை இயக்குநர் தற்கொலை!