சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில், தனியார் பங்குதாரர்களுக்கு அனுப்பிய சம்மனை செயல்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 5) தடை விதித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், வேலூர் என பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ் ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மன்களுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், சென்னை ராஜ்குமார் ஆகிய மூன்று பேரும் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சம்மனை ரத்து செய்யக்கோரி மூன்று பேரும் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், அமலாக்கத் துறை வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மூன்று பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சம்மனை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ராஜ்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்தத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாஜக யாருடன் கூட்டணி? கமலாலயம் வருகிறார் பி.எல். சந்தோஷ்
CM ஆக நடிக்கும் ஜீவா : யாத்ரா 2 டீசர் இதோ!