சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!

Published On:

| By Selvam

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக் கோரி கடந்த 4 வாரங்களுக்கு மேலாக காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோரின் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு  தீர்வுக்காண்பதற்காக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா.மோ.அன்பரசன், “இன்று காலை சாம்சங் தொழிற்சங்க தொழிலாளர்கள் மற்றும் சிஐடியூ செளந்தரராஜன், நிர்வாக தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இருதரப்பினரும் தங்களுடைய பிரச்சனைகளை எங்களிடம் எடுத்து சொன்னார்கள்.

இதனையடுத்து சில கோரிக்கைகளை நிர்வாகம் நிச்சயம் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினோம். இதனையடுத்து 14 கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக நிர்வாக தரப்பில் உறுதியளித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தொழிலாளர்கள் இறந்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும், இந்த மாதம் முதல் ரூ.5000 உயர்த்தி தரப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி நாளை முதல் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்.

தொழிற்சங்கம் தொடங்குவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதுதொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை என்று சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சாம்சங் போராட்டம் தொடர்கிறது அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொலைக்காட்சியில் வரக்கூடிய உடன்பாடு ஏற்பட்டது என்கிற செய்தி உண்மைக்கு மாறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல திசை திருப்பும் இந்த நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: ஏர் ஷோ இறப்புகள்… ஸ்டாலின் நடத்திய விசாரணை… அதிகாரிகள் மீது ஆக்‌ஷன்!

விஜய் மாநாடு: இரண்டு லட்சம் பேர் டார்கெட்… தடைபோடும் விசிக, பாமக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel