தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு: நீதிமன்றத்தில் சாம்சங் தகவல்!

Published On:

| By Selvam

தொழிலாளர்கள் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் (ரூ.840 கோடி) இழப்பு ஏற்பட்டதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை துவக்கி அதை பதிவுசெய்யக்கோரி தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோருக்கு விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடக்கோரி சாம்சங் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எல்லன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி, “தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் நிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கும் என்பதால்,  சாம்சங் என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமையல்ல.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சாம்சங் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாம்சங் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்கி விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், “சாம்சங் தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு உற்பத்தி நிறுவனமாகும், அங்குள்ள தொழிற்சங்கங்கள் தங்கள் பெயர்களில் சாம்சங் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் சாம்சங் நிறுவனம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி மஞ்சுளா ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மும்பை கார் ஜிம்கானாவில் மத பிரச்சாரம்… கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நீக்கம்!

சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share