தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள், அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வார்கள். அரசு கல்லூரிகள், அரசின் பாடத்திட்டங்களைப் பின்பற்றுவார்கள்.
ஆனால் முதல் முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75 சதவீதம் மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கித் தரும் பாடத்திட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வி துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மீதமிருக்கும் 25 சதவீத பாடத்திட்டங்களை அந்தந்த கல்லூரிகளே வடிவமைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக கடந்த ஆண்டு புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவை அரசு நியமித்தது.
உயர்கல்வி மன்ற தலைவர் பேராசிரியர் ராமசாமி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டுக் காலமாக ஒரே பாடத்திட்ட வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. சர்வதேச அளவிலான பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்ற பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஒரே பாடத்திட்ட முறை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக உயர்கல்வி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய அவர், “பட்டப்படிப்பில் 69 பாடத்திட்டங்களும், பட்ட மேற்படிப்பில் 86 பாடத்திட்டங்களும் சீரமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்பிருந்த பாடத்திட்டத்திற்கும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் அனைத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
தமிழ் மொழியை அனைத்து மாணவர்களும் கற்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் 4 செமஸ்டர்கள் கட்டாயம் தமிழ் மொழி பாடத்தைக் கற்க வேண்டும்” என்றார்
மோனிஷா
வைக்கம் நூற்றாண்டு விழா: முக்கிய அறிவிப்புகள்!
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: நாளை ஒத்திவைப்பு!