”என் மகன் என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்”: காக்காதோப்பு பாலாஜியின் தாய் கண்ணீர்!
காவல்துறை உதவியுடன் ரவுடி சம்போ செந்தில் என் மகனை கொன்று விட்டான் என காக்காத்தோப்பு பாலாஜியின் தாய் கண்மணி கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று (செப்டம்பர் 18) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்கு, 19 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பி.டி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த பாலாஜியை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் கைது செய்ய முயன்றனர்.
அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற பாலாஜியை, காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வியாசர்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல்துறை உதவியுடன் ரவுடி சம்போ செந்தில் என் மகனை கொன்று விட்டான் என காக்காத்தோப்பு பாலாஜியின் தாய் கண்மணி கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்போ செந்தில் தான் காரணம்!
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ”ரவுடி சம்போ செந்தில் ஏற்கெனவே தேனாம்பேட்டை சிக்னலில் வெடிகுண்டு போட்டு பாலாஜியை கொல்ல முயற்சித்தான். அதில் அவன் தப்பிவிட்டான்.
தற்போது சம்போ செந்திலை பிடித்தால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முடிக்க முடியும். ஆனால் அவன் காவல்துறையில் யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ கொடுத்து சரிகட்டிவிட்டான். இப்போது அவனுக்கு எதிராக இருந்த என் மகனை போலீசார் என்கவுண்டர் செய்துவிட்டதால் அவன் போலீசாரிடம் சிக்குவான். காவல்துறையும் இந்த வழக்கை முடித்துவிடும். இது தான் நடந்தது.
நேற்று காலை கூட என் மகன் என்னிடம் போனில் பேசினான். வீட்டுக்கு வருவேன் என்றான். ஆனால் வீட்டுக்கு வராமலே போய்விட்டான்” என்று கதறி அழுதார்.
தலைமறைவாக இருக்க வாய்ப்பே இல்லை!
மேலும் அவர், “வேலூருக்கு தினமும் சென்று கையெழுத்திட்டு வரும் என் மகன் தலைமறைவாக இருக்க வாய்ப்பே இல்லை. நேற்று முன் தினம் கூட வேலூர் சென்று போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்டு வந்தான். என் மகனிடம் துப்பாக்கி இருக்கவும் வாய்ப்பே இல்லை. அவன் மீதும் எந்த வழக்கும் இல்லை.
பாலாஜியின் ப்ரெண்ட்ஸ் தாடி சுரேஷ், பொக்க ரவி உள்ளிட்ட 5 பேரை சம்போ செந்தில் கொலை செய்தான். இதற்கு காவல்துறையும் உடந்தை. கடந்த 10 வருசமாக பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை. போன மாதம் அவனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது அறக்கட்டளை மூலம் ரிப்பன் பில்டிங் உட்பட மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கினான். என் மகன் செத்ததுக்கு சம்போ செந்தில் தான் காரணம்” என்று கண்மணி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
லப்பர் பந்து – கிரிக்கெட் வீரர் வருண் கொடுத்த சர்டிபிகேட் : அப்படி என்ன இருக்கு?