சிறுதானியங்களில் சிறந்தது சாமை என்று சொல்வதற்கு முக்கிய காரணம் அதில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து. ஒரு கப் சாமை, நாள் ஒன்றுக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்து தேவையில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்துவிடும். கேழ்வரகு, கம்பை காட்டிலும் அதிகமாகவே இரும்புச்சத்தை கொண்டிருக்கும் சாமையில் பெசரெட் செய்து அசத்தலாம். ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.
என்ன தேவை?
சாமை அரிசி – கால் கப்
பச்சைப்பயறு – ஒரு கப்
மிளகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சாமை அரிசி, பச்சைப்பயறை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற விடவும். பிறகு மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதை இஞ்சி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.