திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் பிரபலமான உணவு உப்புக்கறி. ‘ராத்திரி நேரங்கள்ல காட்டுக்குப் போறவங்க, கோழியைத் திருடி அதை சமைக்கிறப்போ வாசனை வந்துடக்கூடாதுனு, தக்காளி, கரம் மசாலானு வாசனை வர்ற பொருட்கள் எதையும் சேர்க்காம சமைக்கிறதுதான் உப்புக்கறி’ என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
புரட்டாசி மாதம் முடிகிற நிலையில் அசைவத்துக்கு ஆசைப்படுபவர்கள், அக்கம் பக்கத்தினரை முகம் சுளிக்க வைக்காமல் இந்த நாட்டுக்கோழி உப்புக்கறியைச் செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
நாட்டுக்கோழி – ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் – 200 கிராம்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – 100 மில்லி
மஞ்சள் தூள் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை அங்குல அளவுக்கு பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் தோலை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை எண்ணெய்விட்டு காய்ந்ததும்… சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். மிளகாயின் நிறம் எண்ணெயில் இறங்கி சிவப்பாக மாறும்போது, இடித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, கழுவி வைத்த நாட்டுக்கோழி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
வதக்கும்போது கறியிலிருந்து நீர் பிரியும். இந்த நீரே கறி வேக போதுமானது. நீர் சுத்தமாக வற்றும்போது கோழி நன்கு வெந்திருக்கும். ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்தால், ருசி உச்சிக்கு ஏறும்!
சண்டே ஸ்பெஷல் – வயதாக ஆக உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?
கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு