சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஜனவரி 29) இரவு கோவையிலிருந்து பெங்களூரு செல்வதற்கான ஆம்னி பேருந்து ஒன்று கோவையில் இருந்து புறப்பட்டது.
இந்த பேருந்தை ஓட்டுநர் ராஜன் என்பவர் இயக்கி வந்தார். பேருந்தில் ஓட்டுநர் உள்பட 44 பேர் பயணம் செய்துள்ளனர்.
மேட்டூரிலிருந்து தர்மபுரி செல்லும் சாலையில் மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளி என்ற பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்புறத்திலிருந்து லேசான புகை வந்துள்ளது.
இதை பார்த்தவுடன் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, பயணிகளை பேருந்திலிருந்து இறங்க அறிவுறுத்தியுள்ளார். இதனால் பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் அவசர அவசரமாக இறங்கினர்.
இதனை தொடர்ந்து பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கினாலும், அவர்களது உடமைகளை பேருந்திலேயே விட்டுச் சென்றதால் தீக்கிரையாகியது.
உடனடியாக கருமலைக்கூடல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பயணிகள் பேருந்திலிருந்து முண்டியடித்துக்கொண்டு இறங்கியதில் மூன்று பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 11 பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் பகுதியில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்தியா நியூசிலாந்து டி20: போராடி வென்ற இந்தியா