சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள கல்வடங்கம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இன்று குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மொத்தம் 10 மாணவர்கள் சென்ற நிலையில், அவர்களில் 4 பேர் ஆழமான பகுதிக்கு சென்றபோது ஒருவர் தண்ணீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பற்ற நினைத்த மற்ற மூவரும் ஒருவர்பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள கல்வடங்கம் கிராமத்தில் செல்லும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மணிகண்டன், முத்துசாமி, மணிகண்டன், பாண்டியராஜன் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்