சேலத்தில் நிறைவுற்ற புத்தகத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து சேலத்தில் மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்தியது.
இந்தப் புத்தகத் திருவிழாவை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் 50க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலரும் விரும்பும் வகையில் இலக்கியங்கள், அறிவியல் நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சரித்திர நாவல்கள் என அனைத்தும் இடம்பெற்றிருந்தன.
இதனால், புத்தகத் திருவிழாவை பலரும் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டதுடன், புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர். மேலும், தினமும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
10 நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழா கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனால், நவம்பர் 30ஆம் தேதிவரை, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதுடன், சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578-க்கு விற்பனையாகி இருந்தது.
இந்த நிலையில், சேலம் புத்தகத் திருவிழாவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று புத்தக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில், ’சேலம் புத்தகத் திருவிழா: 4 நாட்கள் நீட்டிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது.
புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நாட்டுப்புறப் பாட்டு, பரதநாட்டியம், படுகர் நடன நிகழ்ச்சி, செண்டை மேளம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் விருந்தினர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாகவும், இந்த புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் நாவல்கள், அதிக அளவுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் புத்தக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், ஆண்டுதோறும் இப்புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
தீ தளபதி பாடல்: மோதலில் ரசிகர்கள் பதிவு!