சென்னையில் இன்று (ஜூலை 12) முதல் இரண்டு நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. விலை உயா்வை தொடர்ந்து சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விலை உயர்வு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்துவது, நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக செம்மொழிப்பூங்காவில் இன்று (ஜூலை 12) முதல் நடமாடும் வாகனம் மூலம் 100 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. அதே போல் மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு நடமாடும் வாகனம் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கிலோ தக்காளி ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும் என்றும், மற்ற காய்கறிகளையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: வருத்தம், வைராக்கியம்… துரைமுருகன்- ஸ்டாலின் முற்றுகிறது மோதல்!