Sale of fish in Kasimedu market has Decreased

புரட்டாசி விரதம்: காசிமேடு மீனவர்கள் தவிப்பு!

தமிழகம்

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைப் பலரும் தவிர்ப்பதால் அனைத்து மீன் மார்க்கெட், கறிக்கடைகளில் விற்பனை படு மந்தமாக உள்ளது. குறிப்பாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

வியாபாரிகள் வருகையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மீன்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் வாங்குவதற்கு தயாராக இல்லை. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மொசப்பாறை மீன்கள் நிறைய பிடித்து வரப்பட்டன. பொதுவாக 18 கிலோ கொண்ட ஒரு கூடை மீன்கள் 6,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

ஆனால் நேற்று ஒரு கூடை விலை 300 முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதுபோல் சங்கரா மீன் பொதுவாக 400 முதல் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். நேற்று 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதுபோல் நண்டு, கடுமா, இறால் ஆகியவற்றின் விலைகளும் பாதிக்கு மேல் குறைந்தும் விற்பனையாகவில்லை. இதனால் மீனவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

“புரட்டாசி மாதம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் உள்ளதால் அதுவரை இதே நிலை நீடிக்கும்” என்றும் “டீசல் விலை உயர்வாக உள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு கடலில் சில நாட்கள் தங்கி மீன் பிடித்து வருகிறோம். கரைக்கு வந்தாலும் எங்களுக்கு போதிய வருவாய் இல்லை.

புரட்டாசி மாசம் என்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலில் மீன் பிடிக்க சென்று வந்த செலவை கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை. மேலும் சில வாரங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அப்போது எங்களால் மீன் பிடி தொழிலுக்கு செல்வது கடினம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் பொடிமாஸ்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *