Saithai Duraisamy speak about his son vetri

ஒரு மகன் போனாலும் ஆயிரம் மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் : சைதை துரைசாமி உருக்கம்!

Saithai Duraisamy speak about his son vetri

ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்த ஆயிரம் மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்று சைதை துரைசாமி கூறினார்.

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற போது கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடல் 8 நாள் தேடலுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டு, இன்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  மனிதநேய அறக்கட்டளையில் படித்து பல்வேறு மாநிலங்களில்  ஐஏஎஸ். ஐபிஎஸ் போன்ற பதவிகளில் இருப்பவர்களும் நேரில் வந்து வெற்றியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து வெற்றி துரைசாமி உடல் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்பின் தன் மகன் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி,

“அருமை மகன், அன்பு மகன் வெற்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார். போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இப்படி நான் அழுத்தமாக சொன்னால் போகாமல் இருப்பவன், இந்த முறை கடைசி என்று சொல்லி… இது கடைசி பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்தியா முழுவதும், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பணியில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும் மகள்களும் வந்திருக்கிறார்கள்.

என்னுடைய ஒரு மகன் போனாலும், எனக்கு பக்கபலமாக என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மனவலிமையோடு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி பொருளாதாரத்தால் தடைப்பட்டுவிட கூடாது என்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 ஜாதிகளில் 170 ஜாதிகளைச் சார்ந்தவர்களை அரசின் பணிகளில் இருக்கிறார்கள். மீதியிருக்கிற 89 பிரிவுகளில் உள்ளவர்களை எல்லாம் அரசுப்பதவியில் அமரவைப்பதுதான் என்னுடைய லட்சியம் என்று என்னுடைய மகன் மரணத்தில் உறுதி எடுக்கிறேன்.

அதை நோக்கி பயணம் செய்து சக மனிதனுக்காக வாழ்ந்து, என் மகனின் ஆன்மா சாந்தி அடைகிற வகையில் சேவை செய்வேன்.

எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணிகளை எல்லாம் விட்டுவிட்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் இருக்கிற எனது மகன்கள், மகள்களுக்கும்,
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் வெற்றியாளர்களாக பவனிவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

நான் மனம் கலங்கமாட்டேன், இத்தனை மகன்களை பெற்றிருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆகவே நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை பிரதானப்படுத்தி என் வாழ்க்கையை அமைத்து கொள்வேன் என்று உறுதி எடுக்கிறேன்” என உருக்கமாக பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

வெற்றியின் உடலுக்கு ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி!

Saithai Duraisamy speak about his son vetri

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts