தமிழ்நாட்டில் இருப்பவர்களைப் போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று செயின்ட் கோபைன் (SAINT GOBAIN) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தானம் இன்று (ஆகஸ்ட் 21) தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.68,873 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தானம் பேசும்போது,
“24 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் SAINT GOBAIN நிறுவனத்தை ரூ.525 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொடங்கி வைத்தார். கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் 10 மடங்கிற்கு மேல் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம். அவரது வேண்டுகோளுக்கிணங்க ரூ.3,400 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டோம். இதில் ரூ.800 கோடி திட்டம் முடிவடைந்துள்ளது என்ற செய்தியை பெரும் மகிழ்ச்சியோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். தமிழக அரசு எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இன்றைக்கு ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் ஒரகடத்தில் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
360 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட SAINT GOBAIN நிறுவனம் ஏன் தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை நான் கூற விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களைப் போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது.
மேம்பட்ட கல்வித்தரம் மற்றும் திறன்மிக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நிலையான ஆற்றலை பயன்படுத்தி தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனறால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு தான் வர வேண்டும்.
முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்நாட்டில் தான் அதிக வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. முதலீட்டாளர்களை தங்களது கூட்டாளிகளாகப் பார்ப்பது, ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசு எடுக்கும் முனைப்பு உள்ளிட்ட விஷயங்கள் தமிழ்நாட்டை முதலீடு செய்ய முன்னணி மாநிலமாக நிலை நிறுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், ஓம்ரான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டகுடோ இவானகா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தெற்காசிய தலைமை செயல் அலுவலர் விபுல் துலி, கிரீன்கோ குழுமத்தின் தலைவர் மகேஷ் உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்சன் மனைவி அனுப்பிய ரூ75 லட்சம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!
அனுமதி இல்லாமல் திருச்சி எஸ்.பி-க்கு விளக்க கடிதம்: நாம் தமிழர் நிர்வாகி நீக்கம்!