சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை சரிந்து விபத்து ஏற்பட்டது.
இன்று மாலையில் இருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருப்பதால் அந்த பெட்ரோல் பங்க்கில் சில வாகன ஓட்டிகளும் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
அந்த சமயத்தில் பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் இடிபாடுகளில் 8க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இரு சக்கர வாகனங்களும் நொறுங்கி சேதமடைந்தன.
இந்த விபத்தை தொடர்ந்து வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் ஊழியர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த மதுராந்தகம் முதுகரையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து 7 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினர்.
இந்தியன் கார்பரேஷன் சிஇஓவிடம் விபத்து குறித்து பேசியிருக்கிறோம். எலக்ட்ரிக் கட்டர்களை வைத்து இடிந்து விழுந்த மேற்கூரையை துண்டித்தால் அதிலிருந்து பறக்கும் நெருப்பு பெட்ரோல் டீசல் மீது பட்டுவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டுவிடும்.
தீயணைப்புத் துறையும், போலீசாரும் தற்போது இடிந்து விழுந்த கூரைக்கு அடியில் யாரும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
பிரியா
நிக்கானின் புதிய மிரர்லெஸ் கேமரா : விலை இவ்வளவு தானா?
இதுதான் சமூகநீதியா?: அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!