பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசியதாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (செப்டம்பர் 7) மதியம் சென்னை வந்த மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் சைதை நீதிமன்ற நீதிபதி முன்பாக மகா விஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர். விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதில், “இன்று 06-09-2024-ம் தேதி நண்பகல் 15.00மணிக்கு ஜே1 சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் K. சேட்டு ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்தபோது சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாதி விஜயராஜ் என்பவர் ஆஜராகி கொடுத்த புகாரின் விவரம் பின்வருமாறு:-
ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். நான் விஜய் ஆட்டோ பாயின்ட் என்ற பெயரில் ஆட்டோ கன்சல்டன்டாக வேலை பார்த்து வருகின்றேன். நான் ஒரு மாற்று திறனாளி. நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 28.08.2024 அன்று பகல் சுமார் 03.00 மணியளவில் பரம்பொருள் பவுன்டேசனை சார்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
அதில் படிக்கும் மாணவ மாணவியர் மத்தியில் பேசும் போது மாற்றுத் திறனாளிகள் கண் இல்லாமல் கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம் அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் தான் காரணம் என்று மாற்று திறனாளிகளை இழிவுப்படுத்தியும் மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் அறிவியலுக்கு மாறாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
அதனை அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர், அவரிடம் பள்ளி என்பது சமத்துவம் நிறைந்த இடம். அனைவரும் சமம். தாங்கள் ஏன் ஊனமுற்றவர்களை இழிவாக பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆசிரியர்கள் என்றால் என்னவெல்லாம் பேசலாமா? நான் பேசுவது இவருக்கு எங்கு குத்துகிறது? என்று மாணவர்கள் மத்தியில் அந்த பார்வையற்ற ஆசிரியரை தாழ்த்தி பேசியுள்ளார் என்ற விபரத்தினை நான் யூடியூப் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டு மனவேதனையடைந்தேன்.
மேலும், இவர் பேசிய பேச்சால் ஒட்டுமொத்த மாற்று திறனாளிகள் சமூகத்தையும் கேவலப்படுத்துவது போல் உள்ளது. எங்களை பொதுமக்கள் நாங்கள் ஏதோ முன்ஜென்மத்தில் பாவம் செய்தது போலவும் குற்றம் செய்தது போலவும் கேவலமாக பார்ப்பார்கள்.
மாணவர்கள் மத்தியில் இப்படி பேசினால் அவர்கள் எப்படி மாற்று திறனாளி ஆசிரியர்களை மதிப்பார்கள். நாங்கள் எப்படி பொது மக்கள் மத்தியில் நடமாட முடியும் ஏளனமாக பார்ப்பார்கள். இதனால் எங்களுக்கும் பொதுமக்களுக்கும் மோதலை உண்டாக்க வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்.
எனவே மாற்று திறனாளிகளை பற்றி இழிவாக பேசிய மகா விஷ்ணு என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அய்யா, இன்று 06-09-2024-ம் தேதி நண்பகல் 15.00 மணிக்கு மேற்படி புகாரைப் பெற்று காவல் நிலையம் வந்து ஜே1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்ற எண்.306/2024 ச/பி.192, 196(1)(a), 352, 353(2) BNS r/w 92(a) of THE RIGHT OF A PERSON WITH DISABILITY ACT -ல் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன்.
இதன் முதல் தகவல் அறிக்கையின் அசல் புகாரையும் இணைத்து கனம் IX வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்களுக்கும் பிற நகல்களை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகா விஷ்ணுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!