சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இரவு கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் தனது காதலருடன் இருந்த போது, அங்கே வந்த இரண்டு பேர் அவர்கள் இருவரையும் வீடியோ எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அந்த மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைவெளியே சொன்னால், வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
காவல்துறை விசாரணையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது, சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் ஞானசேகரனை பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடியதில் அவரது இடது கை மற்றும் இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞானசேகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு மாவு கட்டுப்போடப்பட்டது. சிகிச்சை முடிந்தபிறகு அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று தெரிகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாப்கார்ன்… பழைய விலையே தொடரும்: மத்திய அரசு உறுதி!
டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!