சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த வெற்றியைக் காணவில்லை. அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மீட்புப் பணியும் தாமதமாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. தொழிலதிபரான இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்த வெற்றி, தனது புதிய சினிமாவுக்கான லொக்கேஷன் பார்க்கப் போனதாகவும் சொல்கிறார்கள்.
இருவரும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) மதியம் காசாங் நாலா பகுதியிலிருந்து சிம்லா நோக்கி இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சிம்லா விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சென்னை வருவதுதான் அவரது பயணத் திட்டம்.
ஆனால், காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் கார் பயணித்துக்கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால் பேலன்ஸை இழந்த டிரைவர் காரை நிறுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் காரானது சாலையில் இருந்து விலகி, 200 அடிக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த சட்லெஜ் நதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கே விரைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த காரை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
“காரை ஓட்டிய தஞ்சீவ் கஜா பகுதியைச் சேர்ந்தவர். அவர் இறந்துவிட்டார். கார் ஆற்றுக்குள் விழுந்தபோது வெற்றியின் உதவியாளர் கோபிநாத் காரில் இருந்து வெளியே குதித்து பக்கவாட்டுப் பள்ளத்தாக்கில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவர் உடனடியாக அங்கிருந்த லோக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், காரில் பயணம் செய்த வெற்றியை இன்னமும் காணவில்லை. வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று மீட்புப் பணியை மேற்பார்வையிட்டு வரும் டி.எஸ்.பி. நவீன் ஜல்டா கூறியிருக்கிறார்.
இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியாமல் முதலில் சைதை துரைசாமியிடம் போலீஸார் ஞாயிற்றுக் கிழமை இரவே தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனிதநேய அகாடமியில் படித்து இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.களாகவும் ஐபிஎஸ்.களாகவும் பணியாற்றி வருகிறவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். உடனடியாக அவர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினார்கள்.
ஸ்பெயினில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதும்… இமாச்சல பிரதேச போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசி மீட்புப் பணிகளை விரைவுபடுத்தச் சொல்லியிருக்கிறார்.
சட்லெஜ் நதியில் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. பக்ரா நங்கல் அணைப் பகுதியிலும் மீட்புப் படையினர் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வெற்றிக்கு என்னாச்சு என்ற கேள்வி சைதை துரைசாமியின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பதைபதைக்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிப்ரவரி 12-ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: என்ன காரணம்?
ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!