யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய அகாடமி விருது!

Published On:

| By Selvam

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதும், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருதும் இன்று (ஜூன் 15) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் யூமா வாசுகி. இவரது இயற்பெயர் மாரிமுத்து. ‘தன்வியின் பிறந்தநாள்’ சிறார் சிறுகதை நூலுக்காக யூமா வாசுகிக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற நூலை தமிழில் ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக யூமா வாசுகிக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்த இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கு ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யூமா வாசுகி மற்றும் லோகேஷ் ரகுராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி.

ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது.

காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்காருக்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாதி மறுப்பு திருமணம்: சிபிஎம் அலுவலகம் சூறை… தலைவர்கள் கண்டனம்!

“மெலோடி” : வைரலாகும் மெலோனி, மோடி செல்ஃபி வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment