வ.உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
தற்பொழுது 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 ஆய்வு’ நூலுக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வ. உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி அளிக்கிறது!
அவர் கூறுகையில், “ வ. உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வரலாற்று ஆய்வாளராக மாறியதற்கு வ.உ.சி தான் காரணம். தொழிலாளர் இயக்கத்துக்கு வ. உ.சி. முன்னோடியாகத் திகழ்கிறார். இடஒதுக்கீட்டுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சித்த மருத்துவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு பேராளுமை. வ.உ.சி குறித்த பல தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. இந்நூலுக்கு ஆய்வறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உதவினர். அவர்களுக்கு நன்றி. பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எனது சக்திக்கு மீறிய பணி” என்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்த ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வறிஞர்களில் ஒருவர். சமூக வரலாறு, கலாச்சார வரலாறு தொடர்பான ஆய்வுகளில் மிக ஆழமாக ஈடுபட்டு வரும் இவர், இதுவரை ‘அண்ணல் அடிச்சுவட்டில்’, ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்’, வ.உ.சியும் பாரதியும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி!