புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவிய நிலையில்,போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தொழில்துறையினருடன் டிஜிபி சைலேந்திரபாபு இன்று (மார்ச் 9 ) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “ கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல் பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வதந்தி பரப்பியவர்களை பிடிக்க டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசத்தில் தனிப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!